இந்தியா எங்கும் பேசப்பட்டது எந்தமிழ்!
(நா. நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுவை.)
A panel of inscriptions of the God Narasimha adorns the entrance to the main shrine of the temple, believed to have been installed by Tamil traders who lived in Quanzhou in the 13th century. Photo: Ananth Krishnan {courtesy The Hindu]
பாபாசாகேப் முனைவர் பி. ஆர். அம்பேத்கர் எழுதிய சூத்திரர் வரலாறும் தீண்டாமை தோன்றிய வரலாறும் என்ற நூலை ஒவ்வொருவரும் ஊன்றிப் படித்தாக வேண்டும்.
“திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அன்று. தமிழ் என்ற சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச்சொல். தமிழ் என்ற சொல் முதன் முதலில் சமற் கிருதத்தில் இடம் பெற்றபோது தமிதா என்று படிக்கப்பட்டது. பின்னர்த் தமில்லா ஆகி முடிவில் திராவிடா என்று உருத்திரிந்தது. திராவிடம் அல்லது தமிழ் தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக ஆரியர்கள் வருவதற்கு முன் இந்தியா முழுமைக்குமான மொழியாக இருந்தது. காசுமீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்ட மொழி” யாகத்” தமிழ் திகழ்ந்ததை அம்பேத்கர் அழகுறப் படம் பிடித்துக் காட்டுவார்.
வட இந்தியத் தமிழர்கள் சமற்கிருதமொழியை ஏற்றதன் காரணமாகத் தென்னக மொழியாக-திராவிட மொழிக் குடும்ப மொழியாகத்-தமிழ் தாழ்வுற்றது. இதை மெய்ப்பிக்கப் பல சான்றுகளை அண்ணல் அம்பேத்கரே கூறியுள்ளார். அவருடைய சிலைகளுக்கு மாலையிடும் சடங்கைத் தவறாமல் செய்யும் தலைவர்கள் மேற் சொன்ன அவரின் இரண்டு நூல்களையாவது படித்திடல் வேண்டும்.
தமிழ் மொழியின் பரவல் பற்றிப் பல சான்றுகள் கிட்டிய வண்ணமுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கிடையே தமிழ் எழுத்துகளில் செதுக்கப்பட்ட 8 கல்வெட்டுகளைத் தென் கிழக்காசியா விலும் சீனத்திலும் கண்டெடுத்துள்ளனர் என்று தென்கிழக்காசிய ஆய்விதழ் 1998 (Journal of South Asian Studies -1998) கூறுகிறது.
இணையத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற இணையதளம் ஒன்று வானிருந்து பெய்யும் குண்டு மழைக்கிடையேயும், வீழ்ந்திடும் பிணமலை களைத் தாண்டித் தமிழுக்கு உலகெங்கும் பரவிய ஈழத்தமிழர் களின் அருட்கொடைகளை வெளிச்சமிட்டு ஏழாயிரம் பக்கங்களில் காட்டுகிறது. சீனாவில் உள்ள காண்டோன் பகுதிக்கு 500 கற்களுக்கு அப்பால் சுவான்சௌ என்ற துறைமுக நகரில் தமிழ்மொழிக் கல்வெட்டுகள் பற்றி மலேசியாவில் உள்ள முனைவர் செயபாரதி 10, பிப்ரவரி 2006 இல் எழுதிய கட்டுரையை www.tamilnation.org என்ற அந்த இணையதளம் வெளியிட்டது.
“வழக்கமாகத் தமிழர்கள் தாய்லாந்தில் உள்ள மேற்குக் கரைத் துறை முகமான ‘தாகுவா-பா’ வுக்குக் கலங்களில் சென்றடைவர். அங்கிருந்து நிலவழிச்செலவாக நகோன் சிதமராத் அல்லது சொங்க்வா துறைமுகப் பட்டினத்தை அடைவார்கள். இத்துறைமுகங்கள் தாய்லாந்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ளவை ஆகும். அங்கிருந்து கப்பல்கள் மூலம் வியட்நாமியத் துறைமுகங்களைச் சென்று சேர்வர். வியட்நாமில் வேறு கப்பலில் மாறிச் சீனாவின் காண்டோன் மாநிலம் நோக்கிச் செல்வதுண்டு”
நேரடியாகத் தமிழகத்திலிருந்து கப்பல்களில் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவை. மலாக்கா நீரிணைப்பை, சயாம் வளைகுடாவை, தென்சீனக்கடலைத் தாண்டி மலேயத்தீபகற்பத்தைச் சுற்றிக் கொண்டு செல்ல நேரிட்டிருக்கும். பல திங்கள் பன்னூறு கற்கள் மிகுதியாகச் செல்ல விரும்பாமல் தமிழர்கள் குறுகிய வழியில் கப்பல்கள் மாறிச் சீனம் சென்றுள்ளனர். கிழக்கிந்தியக் கம்பெனியும் டச்சு பிரஞ்சு போர்த்துகீசியரும் வணிகக் குடியேற்றங்கள் இந்தியாவில் உருவாக்குவதற்குப் பன்னூறு ஆண்டுகள் முன்பே தமிழ் வணிகர்கள் சீன நாட்டுக் கண்டோனில் குடியேறினர். பல ஊர்களில் தமிழர்கள் குடியேற்றங்களை அமைத்தனர். நம் மிடையே ‘சைனா பசாரோ’ ‘பர்மா பசாரோ’ வராதபோது சீனத்தில் தமிழர்கள் அங்காடியும் தமிழர்கள் வாழும் ஊர்களும் இருந்தன. ‘திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்’ என்ற தமிழ் வணிகர் களின் வணிக அவை சீனத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. தமிழ்க் கல்வெட்டுக் கண்டெடுக்கப்பட்ட சீனத் துறைமுகமான சுவான் சௌவில் சிவன்கோயில் ஒன்றுள்ளது. சீனப் பேரரசன் சேக்கிசைக்கான் உடல் நலிவுறவே அவர் குணமாக வேண்டி ‘சேக்கிசைக்கான்’ ஆணைப்படி சிவனின் படிமம் அக்கோயிலில் நிறுவப்பெற்றது.
கல்வெட்டு சேக்கிசைக்கான் என்று தமிழ்ப்படுத்தி அழைப்பவர் பேரரசர் குப்ளாய் சேக்கான்கான் ஆவார். சிவன் கோயில் திருக்காளத் தீச்சுவரம் எனவும் சிவனுக்கு திருக்காளத்தீச்சு வரம் உடைய நாயனார் என்ற பெயரும். சித்திரை முழுநிலா நாளில் கி.பி. 1203-1281க்கு மிடையே அக்கோயிலைக் கட்டிய சிற்பி தவச்சக்ரவர்த்தி சம்பந்தப் பெருமாள் ஆவார். குப்ளாய்கான் 1260-1294க்கு மிடையே ஆண்டவர். சீனப் பேரரசன் செங்கிசுகானின் பேரனாவார். செங்கிசுகான் மறைவுக்குப் பின் சீனப்பேரரசு நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு மண்டலத்துள் சீனா அடங்கி இருந்தது. மங்கோலியப் பேரரசருள் குப்ளாய்கானே இன்றைய சீனத் தலைநகர் பீசிங்கைக் கட்டு வித்தவனாவான். அவனாட்சியில் தமிழ்க் கோயில் கட்டப்பெற்றுத் தமிழ்க்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது. தமிழக அரசு தமிழறிஞர்களைச் சீனா அழைத்துச் சென்று தமிழர் நாகரிகம் அங்குப் பரவிய உண்மைகளை உலகுக்கு உணர்த்திட வேண்டாமா? சீனப் பெருஞ் சுவரன்று, செந்தமிழ் நாகரிகம் பரவிய இடங்களே சீனத்தில் தமிழன் சுற்றுலாச்செல்ல வேண்டிய இடமென இயம்புமா தமிழ் அரசு?
No comments:
Post a Comment